தென்காசி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம்

தென்காசி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-04 18:45 GMT

தென்காசி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தலைவர் சாதிர் தலைமை தாங்கினார். ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் ராசப்பா என்ற முகமது மைதீன் கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி கூட்டத்துக்கு வந்தார். அவர் கூறும்போது, தென்காசி மவுண்ட் ரோடு, புதுப்பள்ளி மற்றும் வடக்கு மவுண்ட் ரோடு பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரிவது இல்லை. தென்காசி நகரம் முழுவதும் புதிய தெருவிளக்குகள் பொருத்துவதற்கு பணி ஆணை கொடுக்கப்பட்டும் 8 மாதங்களாக பணி தொடங்கப்படவில்லை என்று கூறினார். அதற்கு தலைவர் சாதிர் பதிலளிக்கையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 55 லட்சம் செலவில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது என்பன உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் நகராட்சி எல்கைக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தென்காசி முதல் நிலை நகராட்சியில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நகராட்சி அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம் போதுமானதாக இல்லை. எனவே அம்மன் சன்னதி தெருவில் தற்போது பயன்பாட்டில் இல்லாத நீதிமன்ற கட்டிடம் அல்லது ரெயில்வே ரோட்டில் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கக்கோரி கலெக்டருக்கு கடிதம் அனுப்புவது என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்