பொது வினியோக திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு
பொது வினியோக திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் மற்றும் செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் 30 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரவி நன்றி கூறினார்.