மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்: குடிநீர் டெபாசிட் ரூ.10 ஆயிரம், மாத கட்டணம் ரூ.180-அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு

குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரமும், மாத கட்டணமாக ரூ.180-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2023-08-25 20:23 GMT

குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரமும், மாத கட்டணமாக ரூ.180-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

குடிநீர் திட்டம்

மதுரை மாநகராட்சி கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குடிநீர் டெபாசிட் மற்றும் கட்டணம் செலுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டம் ரூ.1,295 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.370.61 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஆசியன் வளர்ச்சி வங்கி மானியமாக ரூ.240 கோடியே 90 லட்சமும், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.92.65 கோடியும், மாநகராட்சி பங்கு தொகையாக ரூ.37.06 கோடியும் செலுத்தப்படுகிறது. அதில் கடன் வாங்கும் ரூ.92.65 கோடியை திரும்ப செலுத்துவது குறித்து மாநகராட்சி ஒரு ஒப்பந்தம் செய்து உள்ளது.

அதன்படி குடிநீர் இணைப்புக்கும், அதனை பயன்படுத்துவதற்கும் மாத கட்டணம் விதிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை மூலம் கடன் தொகை அடைக்கப்படும். இந்த குடிநீர் இணைப்புக்கு வீட்டின் சதுரடி அளவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒப்புதல்

ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகையாக சுமார் 1200 சதுரடியில் இருந்து 1800 சதுரடி வரை உள்ள குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.20 ஆயிரமும் நிர்ணயிக்கபப்ட்டு உள்ளது. அதே போல் மாத குடிநீர் கட்டணமாக குடியிருப்புக்கு ரூ.180-ம், வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.540-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கட்டண விகிதம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் என்ற அடிப்படையில் உயர்த்தப்படும். அதே போல் 1,801 சதுரடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு அதன் அளவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அ.தி.மு.க. எதிர்ப்பு

இந்த தீர்மானத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை எம்.ராஜா பேசும் போது கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். இப்போது குடிநீர் வரியை உங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தி உள்ளனர். 600 சதுரடியில் குடியிருப்பவர்கள் ஏழை மக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்றால் என்ன செய்வார்கள். எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடியாக அதில் தலையீட்டு, அனைத்து கவுன்சிலர்கள் குழுவை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்றார். அதனை மாநகராட்சி செயல்படுத்த நினைத்தால் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் பிரவீன் குமார், கவுன்சிலர்கள் குழு அமைக்கப்பட்டு இந்த கட்டண விகிதம் குறித்து விவாதிக்கப்படும் என்றார். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் விவாதம் நடந்தது. முன்னதாக அ.தி.மு.க. நாகஜோதி சித்தன் தனது வார்டில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி தனது மனுக்களுடன் கமிஷனர், மேயர் இருக்கை உள்ள மேடையில் ஏறி நின்று கொண்டார். உங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கூறியதால், அவர் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்