வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க வேண்டும்- நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ராஜாஜி மண்டபத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 2 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மழை நீர் வடிகால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அப்துல் ரகுமான் முதலாளி நகரில் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்கும் வகையில் ஓடையை தூர்வார கடந்த வாரம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதே போல் மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அவசர கால எண்
மழைக்காலத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் பொது மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை 1800 425 46 56 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
நெல்லை மாநகராட்சியில் தினமும் 170 டன் குப்பை சேகரம் ஆகிறது. ராமையன்ட்டியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைககளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் தரம் பிரிக்கவும், இதில் மக்கும் குப்பைகளை எந்திரம் மூலம் மக்கச் செய்து உரமாக்கும் வகையில் ரூ.4 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் பற்றாக்குறை
கூட்டத்தில் கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மாநகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க வரும் போது கவுன்சிலர்களுக்கு என்று தனியாக அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.
மண்டல தலைவர் ரேவதி பிரபு பேசுகையில், ''தச்சநல்லூர் மண்டலத்தில் ஒருசில தெருக்களில் சமுதாய ரீதியில் பெயர்கள் உள்ளன. அவற்றை மாற்றி தமிழ் இலக்கிய பெயர்களை சூட்ட வேண்டும்'' என்றார்.
கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பேசுகையில், ''அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து தீர்மானங்களும் ஆல்பாஸ் முறையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக முறைப்படி விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் வசதிக்காக கேண்டீன் அமைக்க வேண்டும்'' என்றார்.
வே.ஜெகநாதன் பேசுகையில், ''பாளையங்கோட்டை 5-வது வார்டில் ரகுமத் நகர் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கிறது. தொடர்ந்து சீராக குடிநீர் வழங்க வேண்டும். 5-வது வார்டில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் வேலைகள் முழுமையாக நடைபெறவில்லை. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'' என்றார். இதே போல் கவுன்சிலர்கள் விவாதத்துக்கு பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வறுமைக்கோடு
மத்திய பா.ஜனதா அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க வேண்டும், எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க கவுன்சிலர்கள் வருகை
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்திரசேகர், அமுதா மற்றும் ஜெகநாதன், முத்துலட்சுமி ஆகிய 4 பேரும் வந்திருந்தனர்.
இதில் ஜெகநாதனும், முத்துலட்சுமியும் ஏற்கனவே தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராததால் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை வாங்கியதால், அந்த தகுதி நீக்க தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
கூட்டத்தில், மண்டல தலைவர்கள் மகேசுவரி, ரேவதி பிரபு, பிரான்சிஸ், கதிஜா இக்லாம் பாசிலா மற்றும் கவுன்சிலர்கள், செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.