கடலூர் ஆல்பேட்டையில் வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: பொதுமக்களுடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி திட்டமிட்டபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடிவு
கடலூர் ஆல்பேட்டையில் வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தொிவித்த பொதுமக்களுடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.;
கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே ராஜவிநாயகர் வீதியில் 43 குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருவதாக கூறி, அவர்களின் வீடுகளை காலி செய்ய அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
25-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடலூரில் இருந்து நடைபயணமாக சென்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க போவதாக அறிவித்து இருந்தனர்.
இது பற்றி அறிந்ததும் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நேற்று அவர்களை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தினார். இதில் துணை தாசில்தார் அசோகன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது கோட்டாட்சியரிடம், அப்பகுதி மக்கள் தங்களுக்கு வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும். கடலூர் மாநகராட்சி பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, அந்த கோரிக்கைகளை ஏற்கவில்லை. அப்போது சிலர் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை அவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் அதை வாங்கவில்லை. ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பொதுமக்கள் உடன்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி இல்லை. திட்டமிட்டபடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க இருக்கிறோம் என்று கூறி, கலைந்து சென்றனர்.