பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்
சொத்து வரி செலுத்த அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
வரி செலுத்த அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி...
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் புதிதாக வீடு கட்டுபவர்கள் சொத்து வரி, வீட்டு வரிகளை கட்டுவது வழக்கம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் வசிக்கும் மக்கள் தங்களது சொத்து வரியை கட்டுவதற்காக நகராட்சியில் மனு அளித்து பல மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும், மேலும் சொத்து வரி கட்டுவதற்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பாய், தலையணை, பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 5 வது வார்டு உறுப்பினர் வடிவேலு நகராட்சி கமிஷனர் அலுவலக அறையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நகராட்சி கமிஷனர் நாராயணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துவரி செலுத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டிருப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை நாங்கள் செலுத்த முன் வந்தாலும் அதிகாரிகள் அவர்களுக்கு அதிக அளவில் பணம் கேட்டு பணிகளை அப்படியே நிறுத்தி வைத்து தங்களை அலைக்கழிப்பதால் தங்கள் வங்கிகளில் கடன் வாங்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி கமிஷனர் 2 நாட்களில் சொத்து வரி கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.