குடியிருப்பு பட்டாவை ரத்து செய்யக்கூடாது-கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

மேல முனைஞ்சிபட்டியில் குடியிருப்பு பட்டாவை ரத்து செய்யக்கூடாது என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு வழங்கினர்.

Update: 2023-01-02 18:45 GMT

மேல முனைஞ்சிபட்டியில் குடியிருப்பு பட்டாவை ரத்து செய்யக்கூடாது என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர்.

மண் திருட்டு

நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில், ''எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப்பட்டது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அம்பை அருகே சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், ''ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ரூ.7,500 செலுத்தினேன். 6 மாதம் ஆகியும் அதற்கான ரசீதுகள் எனக்கு வழங்கப்படவில்லை'' என்று கூறியுள்ளார்.

பட்டாவை ரத்து...

நாங்குநேரி தாலுகா மேல முனைஞ்சிபட்டியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு வழங்கினர். அதில், ''எங்கள் ஊரில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அதில் நாங்கள் வீடு கட்டாமல் வைத்துள்ளோம். தற்போது அந்த பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனை தடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது நஸ்ரின் சிபிகா (வயது 23) என்பவர் கொடுத்த மனுவில், ''நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின்போது ரூ.1 லட்சமும், சீர்வரிசை பொருட்களும் எனது குடும்பத்தினர் கொடுத்தனர். தற்போது எனது கணவர் தொழில் செய்ய பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வருகிறார். அவரது குடும்பத்தினரும் என்னை துன்புறுத்துகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்