குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2023-09-28 12:58 GMT

ஆரணி

ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தின் அனேக பகுதிகளில் மழை பெய்து உள்ளது. திருவண்ணாமலையிலும் நேற்று மிதமான மழை பெய்தது.

இதேபோல் ஆரணியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவு மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவு பலத்த மழை பெய்தது. .

இதன் காரணமாக ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் சேவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள தடுப்பனையை மீறி உபரி தண்ணீர் ஆற்றில் வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது

மேலும் நகரில் தாழ்வான பகுதிகள் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் புரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழைநீர் சாலையிலே வழிந்து ஓடியது.

தற்போது வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்து குளம் போல காணப்படுகிறது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், லாரி போன்ற வாகனங்கள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

85.4 மில்லி மீட்டர் மழை

அதேபோல முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை இணைக்கும் பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

எனவே, மழைநீர் சூழ்ந்த பகுதிகளிலும், சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகமும், அந்தந்த ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை பெய்த மழையில் அதிகபட்சமாக ஆரணியில் 85.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வெம்பாக்கம்- 70, போளூர்- 28.8, செய்யாறு- 25, ஜமுனாமரத்தூர் மற்றும் வந்தவாசி- 14, தண்டராம்பட்டு- 7.2, சேத்துப்பட்டு- 6.4, திருவண்ணாமலை- 1.

Tags:    

மேலும் செய்திகள்