விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் இருப்பு வைப்பு: தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்-வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தம்

விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-07-29 13:54 GMT

பொள்ளாச்சி

விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.

தோப்புகளில் இருப்பு வைப்பு

பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி விவசாயிகள் மட்டுமல்லாது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சுவை அதிகமாக இருப்பதால் பொள்ளாச்சி தேங்காயை சமையலுக்கு அதிகளவு பயன்படுத்துகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கன்டெய்னர்கள் மூலம் கேரளா மாநிலம் கொச்சிக்கு தேங்காய்களை கொண்டு சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தேங்காய் விலை மிகவும் குறைந்து விட்டது. இதற்கிடையில் ஓணம், விநாயகர் சதுர்த்தியையொட்டி மீண்டும் விலை உயரும் என்ற விவசாயிகள் தேங்காய்களை இருப்பு வைத்து உள்ளனர். இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து தேங்காய்களை வாங்கி வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தம்

பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து வாரந்தோறும் 30 கன்டெய்னர்களில் 900 டன் கொச்சி துறைமுகத்துக்கு தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து துபாய்க்கு கப்பல் மூலம் ஏற்றுமதி ஆகிறது. இதை தவிர தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக வாரத்தில் 30 கன்டெய்னர்களில் தேங்காய் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது கூடுதலாக 120 கன்டெய்னர்களில் தேங்காய் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் தேங்காய் தேக்கமடைந்து உள்ளதால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் தோப்புகளில் தேங்காயை இருப்பு வைத்து உள்ளனர்.

சுமார் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் பழனி, உடுமலை, கோபிசெட்டிபாளையம், சேலம், கரூர் மற்றும் ஆந்திராவில் இருந்து தேங்காய்களை வாங்கி, மும்பை, டெல்லி போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் தேங்காய் வரத்து அதிகமாக உள்ளது. இதேபோன்று கேரளாவில் தேங்காய் வரத்து அதிகமாக உள்ளதால் ஓணம் பண்டிகைக்கு விலை உயருவதற்கு வாய்ப்பு இல்லை. விநாயகர் சதுர்த்திக்கு தேங்காய் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். தற்போது தேங்காய் கிலோவுக்கு கருப்பு ரூ.24 முதல் 25 வரையும், பச்சை ரூ.23 முதல் ரூ.24-க்கும் விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்