தொண்டு நிறுவன மன நல காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்

தமிழ்நாடு முழுவதும் தொண்டு நிறுவன மனநல காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;

Update: 2023-07-19 18:01 GMT

தனியார் மன நல காப்பகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த தனியார் மன நல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு 59 பெண்கள் போதுமான இடவசதி, உணவின்றி இருந்த நிலையை கண்டு அங்கிருந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அவர் உத்தரவிட்டார்.

மேலும் புதுக்கோட்டை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராமு பணியிடை நீக்கமும், அன்னவாசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர். தொடர்ந்து மன நல காப்பகத்தில் இருந்த பெண்கள் நேற்று முன்தினம் இரவு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பிரிவு

இந்த நிலையில் மனநல காப்பகத்தில் இருந்து மாற்றப்பட்டவர்களை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு பழங்கள், புத்தாடைகளை வழங்கினார். மேலும் மருத்துவமனையில் ரூ.1.06 கோடியில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

அன்னவாசலில் தனியார் மன நல காப்பகத்தில் இருந்து மாற்றப்பட்டவர்களில் சுய நினைவுகளுடன் உள்ளவர்களின் உறவினர்களை கேட்டறிந்து அவர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காப்பகத்தில் இருந்த அனைவரும் 100 சதவீதம் குணமடையும் வகையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

ஆய்வுக்கு உத்தரவு

தனியார் மன நல காப்பகத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவன மனநல காப்பகங்கள், மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வீடியோ பதிவு செய்து காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல பராமரிப்பு இல்லாமல் செயல்படும் காப்பகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் தொண்டு நிறுவன மனநல காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அரசு பல் மருத்துவக்கல்லூரி

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மத்திய அரசு 20-ந் தேதி தொடங்கினால் நாங்கள் 25-ந் தேதி ஆன்லைனில் முறையாக தொடங்குவோம். புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டுமான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்ததும் விரைவில் திறக்கப்படும். இந்த கல்வியாண்டிலே 50 மாணவர்கள் சோ்க்கை நடைபெறும்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.அப்போது அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்