தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தின் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி மொரப்பூர், தர்மபுரி மற்றும் கடத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சியில் ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தானிய கிடங்கு, ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ரேஷன் கடையில் ஆய்வு
தொடர்ந்து ஒடசல்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15.23 லட்சம் மதிப்பீட்டில் ஏரி மேம்படுத்தல் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தர்மபுரி அருகே உள்ள ராஜாப்பேட்டை ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களை பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவிட்டர். பின்னர் கடத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நவீன அரிசி ஆலையை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மடதஅள்ளி கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல், ரங்கராஜன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.