கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.;
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் கொலையனூரில் உள்ள தமிழ்நாடு அரசு முந்திரி காட்டிற்கு அருகே உள்ளது. நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற ஜோதி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று உயிருடன் கிடப்பதை கண்டார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.