ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கியவர் மீட்பு

சேலம் ஜங்சனில் ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கியவரை பாதுகாப்பு படை வீரர் விரைந்து சென்று காப்பாற்றினார்.

Update: 2023-05-14 20:10 GMT

சூரமங்கலம்

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் புறப்பட்டது. அப்போது ஒரு தம்பதி ரெயிலில் ஏற முயன்றனர். கணவர் ஏறிய நிலையில், பையுடன் சென்ற மனைவியால் ரெயிலில் ஏற முடியவில்லை. இதனால் ரெயிலை பிடிக்க ஓடி சென்ற அவர், பையுடன் கீழே தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார். அவர் ரெயிலில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் சென்றார். அப்போதுஅங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அஜித், விரைந்து செயல்பட்டு, அந்த நபரை காப்பாற்றினார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கும், அவருடைய மனைவிக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மேலும் செய்திகள்