சென்னையில் பல கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை மீட்பு

சென்னையில் பல கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டது. சிலையை பதுக்கி வைத்திருந்த இரும்பு கடைக்காரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2022-07-23 00:01 GMT

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்திய தொல்லியல் துறையினரிடம் நடராஜர் சிலை ஒன்றை காண்பித்து, அது பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஜெர்மனிக்கு அந்த சிலையை கொண்டுசெல்லவும் அவர் அனுமதி கோரினார். ஆனால் தொல்லியல் துறையினர், அந்த சிலை பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர்.

குறிப்பிட்ட அந்த நடராஜர் சிலை சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த கடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சிலை மீட்பு

அப்போது, குறிப்பிட்ட நடராஜர் சிலை அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்து கைப்பற்றப்பட்டது. 4½ அடி உயரம் உள்ள அந்த ஐம்பொன் சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலத்தைச் சேர்ந்த அந்த சிலை எந்த கோவிலில் திருடப்பட்டது, யாரால் திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர் பார்த்திபனிடம் விசாரணை நடக்கிறது. அந்த சிலைக்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த சிலை தமிழக கோவில்களில் உள்ள 3-வது பெரிய நடராஜர் சிலை ஆகும். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்