துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஜவுளிக்கடை அதிபர் மீட்பு-ஏற்காடு ஓட்டலில் அடைத்து வைத்த கூலிப்படை சிக்கியது

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட திருச்சி ஜவுளிக்கடை அதிபரை ஏற்காட்டில் போலீசார் அதிரடியாக மீட்டனர். அவரை ஏற்காடு ஓட்டலில் அடைத்து வைத்த கூலிப்படையும் போலீசில் சிக்கியது.;

Update: 2023-06-27 20:39 GMT

ஏற்காடு:

ஜவுளிக்கடை உரிமையாளர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா துத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் காமராஜ் (வயது 32). இவர், திருச்சி மாவட்டம் திருெவறும்பூா் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி திடீரென மாயமானார்.

அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்படி இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே திருச்சி போலீசில் காமராஜ் மாயமானது குறித்து புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது காமராஜின் செல்போன் சிக்னல், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. செல்போன் சிக்னல் காட்டிய இடத்தை போலீசார் சோதனை நடத்திய போது, அது ஏற்காட்டில் உள்ள ஒரு ஓட்டலை காண்பித்தது.

6 பேர் சிக்கினர்

உடனே போலீசார், காமராஜை கடத்தியவர்களை ரகசியமாக கண்காணித்தனர். அங்கு 6 பேர், ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தனர். அவர்களை ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி போலீசார் ஏற்காடு விரைந்து வந்தனர். திருச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜஸ்டின், திருவைராஜ் மற்றும் போலீசாரிடம் அந்த 6 பேரையும் ஏற்காடு போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடை அதிபரும் மீட்கப்பட்டார். அவரையும் ஏற்காடு போலீசார் திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இதனிடையே பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

ஜவுளிக்கடை உரிமையாளர் காமராஜூக்கும், கார்மெண்ட்ஸ் உரிமையாளர் ஒருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காமராஜ், கார்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் பாக்கி வைத்து விட்டு வேறு ஒருவரிடம் துணிகள் வாங்கியதாக தெரிகிறது.

இதனை அறிந்த கார்மெண்ட்ஸ் உரிமையாளர், கூலிப்படையை சேர்ந்த முஸ்தபாவிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது பாக்கி பணம் ரூ.10 லட்சத்தை வசூல் செய்தால் ஆளுக்கு பாதி வைத்துக் கொள்வதாக இருவரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி முனையில் கடத்தல்

இதற்கு ஒப்புக்கொண்ட முஸ்தபா, தன்னுடைய கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து காமராஜை கடந்த 24-ந் தேதி துப்பாக்கி முனையில் கடத்தி ஏற்காடு கொண்டு வந்து ஒரு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர்.

காமராஜ் குடும்பத்தினர் எப்படியும் தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பணத்தை கொண்டு வர சொல்ல வேண்டும் என்பதற்காக செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு காமராஜை மீட்டதுடன், கடத்தி சென்றவர்களையும் பிடித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

6 பேர் கைது

இதை தொடர்ந்து காமராஜை துப்பாக்கி முனையில் கடத்திய முஸ்தபா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜவுளிக்கடை அதிபர் காமராஜை கடத்துவதற்கு கூலிப்படையை ஏவிய கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்