தலைவாசல் அருகே தனியார் நூற்பாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 35 வெளிமாநில பெண்கள் மீட்பு

தலைவாசல் அருகே தனியார் நூற்பாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த வெளி மாநிலங்களை சேர்ந்த 35 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2022-10-30 20:56 GMT

தலைவாசல்:

கொத்தடிமைகள்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தனியார் நூற்பாலையில் ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 35 பெண்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் கொத்தடிமைகளாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாகவும் வேலை கடினமாக இருப்பதாகவும் தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பந்தப்பட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த நூற்பாலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் தலைவாசல் தாசில்தார் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் ராதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நூற்பாலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.

மீட்பு

அப்போது அந்த வெளி மாநில பெண்கள் 35 பேருக்கும், 8 மணி நேர வேலைக்கு பதிலாக கூடுதல் நேரம் பணிபுரிய செய்ததுடன், வார விடுமுறை தராமல் தினக்கூலித்தொகையையும் குறைத்து கொத்தடிமையாக அவர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து கொத்தடிமையாக இருந்த 35 பெண்களையும் அதிகாரிகள் மீட்டனர்.

மேலும் நூற்பாலை நிர்வாகத்திடம் இருந்து அந்த பெண்கள் 35 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கருணைத்தொகையை அதிகாரிகள் வாங்கி கொடுத்தனர். பின்னர் அந்த 35 பெண்களையும் சேலத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அந்த பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா முன்னிலையில் தலைவாசல் தாசில்தார் வரதராஜன் தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த 35 பெண்களையும் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் இருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்