ரெட்டியார்சத்திரத்தில் மாயமான வாலிபர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு

ரெட்டியார்சத்திரத்தில் மாயமான வாலிபர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

Update: 2023-04-23 20:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அந்த கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அதனுள் மனித எலும்புக்கூடு மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கிணற்றில் மிதந்த எலும்புக்கூட்டை மீட்டனர். ஆனால் அதில் மண்டை ஓடு இல்லாமல் இருந்தது. தொடர்ந்து திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்களை வரவழைத்து கிணற்றுக்குள் மூழ்கிய மண்டை ஓடு மீட்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அது ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்த ராகுல் கண்ணன் (வயது 21) என்பவரின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி இவர் திடீரென்று மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை கதிரையன், ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கதிரையனை போலீசார் அங்கு வரவழைத்தனர். அப்போது அவர் தனது மகன் மாயமான அன்று அணிந்திருந்த டவுசர், இந்த மனித எலும்புக்கூட்டில் உள்ளது. மேலும் அது தனது மகன் தான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டை போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்