8,18,344 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகம்

Update: 2023-07-19 16:44 GMT


திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம், இன்று (வியாழக்கிழமை) முதல் 8 லட்சத்து 18 ஆயிரத்து 344 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக வழங்கப்படும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.

வீடு, வீடாக வழங்கப்படும்

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் விரிவான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்-1, மண்டலம்-2 ஆகியவற்றுக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்ளுக்கு உட்பட்ட 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

2-வது கட்டமாக அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம்-3, மண்டலம்-4 ஆகியவற்றில் உள்ள 30 வார்டுகளிலும், 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் முழுவதுமாக பதிவு முகாம்கள் நடக்கிறது. 1,135 ரேஷன் கடைகள் மாவட்டத்தில் உள்ளன. 1,113 முகாம்களில் 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள், பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் முகாம் நடைபெறும். ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக வழங்கப்படும்.

இன்று முதல் டோக்கன் வினியோகம்

இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை (வெள்ளிக்கிழமை), 22-ந் தேதி, 23-ந் தேதிகளில் முதல்கட்டமாக நடைபெறும் திருப்பூர் மாநகராட்சியின் முதல் மற்றும் 2-வது மண்டலங்கள், 265 ஊராட்சி பகுதிகளில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீட்டுக்கே சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற யாரும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பாக இந்த டோக்கனில் டோக்கன் எண் மற்றும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த முகாம் மையத்துக்கு வர வேண்டும், ரேஷன் கார்டு எண் உள்ளிட்டவை குறித்து வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்தில் சென்றால் போதும். பொதுமக்களின் வசதிக்காக 24-ந் தேதி, 25-ந் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 30 விண்ணப்பங்கள், மாலையில் 30 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். 26-ந் தேதி முதல் காலை 40 விண்ணப்பங்கள், மாலையில் 40 விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கிராம நிர்வாக அதிகாரி, மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

8,18,344 ரேஷன் கார்டுகள்

5 மையங்களுக்கு 1 மண்டல அலுவலர், 15 மையங்களுக்கு 1 கண்காணிப்பு அலுவலர் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 82 அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் 2 கட்ட பதிவு முகாம்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விண்ணப்பம், டோக்கன், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். வேறு எந்தவித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க வேண்டாம்.

மாவட்டத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 344 ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைத்து கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்படும். விண்ணப்பத்தை பதிவு செய்ய உள்ளார்கள். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மின்கட்டண ரசீது இல்லாதவர்கள், வங்கி பாஸ் புத்தகம் இல்லாதவர்களும் முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறை அரசு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் கூறும்போது, 'ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு ரேஷன் கடை விற்பனையாளர் சென்று விண்ணப்பம், டோக்கன் கொடுப்பார்கள். சம்பந்தப்பட்ட முகவரியில் குடியிருக்காதவர்கள் தங்களின் ரேஷன் கடைக்கு சென்று தான் விண்ணப்பம், டோக்கன் பெற வேண்டும். ரேஷன் கடை விற்பனையாளர்கள் வழங்கும் விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது முழுக்க முழுக்க கணினியில் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. திட்டத்தின் வரைமுறைக்கு உட்பட்டு தகுதியானவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது தகுதியானது அல்லது முழுமையாக பதிவு செய்யப்படாமல் உள்ளது போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக வரும்' என்றார்.

அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்