செட்டிகுளத்தில் தார்சாலை அமைக்க கோரிக்கை

செட்டிகுளத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கும் தார் சாலையை புதிதாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-10-30 18:40 GMT

குண்டும் குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் முன்பு தொடங்கி குன்னுமேடு குடியிருப்பு வழியாக சிற்றேரி கடைகாலுக்கு செல்லும் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த தாா் சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.

மேலும் போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக தார் சாலை அமைத்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடும் சிரமம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். மேலும் ஏரி பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கும், சாகுபடி செய்யப்பட்ட விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது சாலை பழுதடைந்ததால் மாணவர்களும், விவசாயிகளும் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தார் சாலை அமைக்க கோரிக்கை

மணிகண்டன் கூறுகையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த சாலையை அகலப்படுத்தி, கழிவுநீர், மழைநீர் செல்வதற்கு ஏதுவாக சாலையின் இருபுறமும் வடிகால் வசதியும் ஏற்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் பொது சுகாதார நிலையம் இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க செல்கின்றனர். எனவே பொது சுகாதார நிலையம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்