அணுகுசாலை வழியாக கல்லகம் கேட் நிறுத்தத்திற்கு பஸ்களை இயக்க கோரிக்கை

அணுகுசாலை வழியாக கல்லகம் கேட் பஸ் நிறுத்தத்திற்கு பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-09 18:49 GMT

கீழப்பழுவூர்:

பஸ்சை மறித்து பயணம்

அரியலூர் மாவட்டம், கல்லகம் கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோக்குடி, எசனை, ஆங்கியனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பஸ்களில் ஏறி சென்று வருகின்றனர். மேலும் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கல்லகம் ரெயில்வே பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், அரியலூர்-திருச்சி வழித்தடத்தில் செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லகம் பஸ் நிறுத்தத்திற்கு அணுகுசாலை அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்பகுதியில் உள்ள தடுப்புகள் அகற்றப்படாததால், பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே இயக்கப்படுகிறது. இதனால் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் பயணத்தை மேற்கொள்ளும் கோக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புறவழிச்சாலையில் பஸ்சை மறித்து ஏறி, பயணம் மேற்கொள்கின்றனர்.

கோரிக்கை

இதனால் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்துகளில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி கிராமத்திற்கு செல்வதற்கும், தனியாக நின்று பஸ்களில் ஏறுவதற்கும் அச்சப்படும் நிலை உள்ளதாக பெண்பயணிகள் கூறுகின்றனர். அணுகுசாலையில் உள்ள தடுப்புகளை அகற்றினால், அனைத்து பஸ்களும் அணுகுசாலை வழியாக கல்லகம் கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும்.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பாதிக்கப்படுகின்ற கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்