பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம் சேதம்
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக பேரம்பாக்கத்தில் இருந்து நரசிங்கபுரம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் பள்ளி மாணவ- மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த தரைப்பாலம் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலத்தின் அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதியுற்றவாறு சென்று வருகின்றனர்.
கோரிக்கை
இந்த தரைப்பாலம் சேதமடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நரசிங்கபுரம், இருளச்சேரி, கூவம், குமாரச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லக்கூடிவர்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது இந்த தரைப்பாலத்தை சுற்றிலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைக்கூளங்களை கொட்டி வருகிறார்கள்.
எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு பேரம்பாக்கம் தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.