பழுதடைந்த அறந்தாங்கி-கூத்தாடிவயல் சாலையை சீரமைக்க கோரிக்கை
பழுதடைந்த அறந்தாங்கி-கூத்தாடிவயல் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் இருந்து பிரிந்து செல்லும் கூத்தாடிவயல், மூக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது.
மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூத்தாடிவயல், மூக்குடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த சாலையை சீரமைக்கக்கோரி பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.