குடிநீர் குழாயை அகற்ற கோரிக்கை
குடிநீர் குழாயை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சிவகாசி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் இந்திராநகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பொது தெரு குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த குழாயில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் இருதரப்பினரும் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரச்சினைக்குரிய அந்த குழாயை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் சிலர் நேற்று காலை பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன், செயலர் லட்சுமணபெருமாள் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன், கோடைக்காலம் தொடங்கி விட்டது போதிய தண்ணீர் இல்லை, கூடுதல் குழாய்களை அமைத்து கொடுத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உதவுங்கள் என்று தான் கோரிக்கை மனுக்கள் வரும். ஆனால் முதன்முறையாக பயன்பாட்டில் உள்ள தண்ணீர் குழாயை அகற்ற கோரி மனு வந்துள்ளது. இந்த விசித்திரமான கோரிக்கை மனு மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.