செடி,கொடிகளை அகற்ற கோரிக்கை
கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே செடி,கொடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த சாலை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் அந்த சாலையில் தெருவிளக்கு இல்லை. இதனால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையின் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடிகளை அகற்றி தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.