தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுகோள்
தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் 137-வது பிறந்த நாள் விழா பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே டவுன் பள்ளிவாசல் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஸ்வநாததாசின் உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட, நகர தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் விஸ்வநாததாஸ் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். மருத்துவ சமுதாயத்திற்கு ஆதிக்க சாதியினரால் ஏற்படுகின்ற தொந்தரவுகளை களைய சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் மோகன், செயலாளர் தியாகராஜன் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.