ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-25 21:21 GMT

சிவகாசி, 

மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம்

சிவகாசி-ஆலங்குளம் ரோட்டில் மாரனேரி உள்ளது. இந்த கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஏழை கூலி தொழிலாளர்களுக்கு வசதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மாரனேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இரவு நேரங்களில் சிவகாசிக்கு வர முடியாத நோயாளிகள் மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் அந்த பகுதியில் உள்ள 15 கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

சுற்றுச்சுவர்

ஆரம்ப காலத்தில் கட்டிடம் மட்டும் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அதன் பின்னர் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கி வருகிறது.

இரவு நேரத்தில் இங்கேயே தங்கி இருந்து சிகிச்சை பெறும் பெண் நோயாளிகள் போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் கட்டிடம் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய சுற்றுச்சுவர் வசதியும், சேதமடைந்த பகுதியை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி பாலமுருகன் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்