மருதையாற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த கோரிக்கை
மருதையாற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரின் வழியாக ஓடும் மருதையாற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் மருதையாற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. அந்த பாலம் முன்பு மழையால் அடித்து செல்லப்பட்டதில் பலர் இறந்தனர். அவர்களின் நினைவாக ஒரு நினைவு தூண் அமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரியலூருக்கு காலையில் செல்ல கூடுதல் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.