தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கூறினார்.

Update: 2023-04-27 18:51 GMT

தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கூறினார்.

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

டெல்லியை சேர்ந்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அறையையும், மகளிர் போலீஸ் நிலையத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர் குழந்தைகள் தொடர்பான வழக்குகள், போக்சோ வழக்குகள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு இல்லாததால், திண்டுக்கல்லில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு குழு வர வேண்டி உள்ளது. இதனால் வழக்குகளில் காலதாமதம் ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்திற்கு என்று தனியாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஏற்படுத்த கலெக்டருக்கு பரிந்துரைக்க உள்ளேன். மதுரையில் கூர்நோக்கு இல்லங்களில் எந்த பிரச்சினையும் இல்லை.

கூர் நோக்கு இல்லங்கள்

தமிழகத்தில் தொடர்ந்து கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பித்து செல்கின்றனர். கூர்நோக்கு இல்லங்கள் நல்வழிப்படுத்ததான் உள்ளன. பாதிக்கப்படும் இடங்களாக கூர்நோக்கு இல்லங்கள் இருக்கக்கூடாது. இங்கிருந்து சிறார்கள் தப்பிக்க உளவியலே காரணமாக உள்ளது. சிறார்களை பார்க்க ஜாமீனில் எடுக்க பெற்றோர்களோ, உறவினர்களோ வராததால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் அரசு உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கான பணியாளர்களை நியமிக்க வேண்டும். 5 மாநிலங்களில் 21 கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்துள்ளேன். தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் யாசகம் பெறுவது...

குழந்தைகள் யாசகம் பெறுவது, குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை யாசகர்களை கண்டறிந்து மீட்க இணைஆணையர் மற்றும் துணை ஆணையர், கோட்டாச்சியர், வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இதுபோன்று குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் வாரம் ஒருமுறை கண்காணித்து கோவிலில் குழந்தைகள் யாசகம் பெறுவது கண்காணிக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்படுவர். அவர்கள் காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளே நேரடியாக தங்களின் குறைகளை தெரிவித்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் திட்டம் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும் சட்டம் மற்றும் முடிவுகள் குறித்து டி.ஜி.பி. மற்றும் முதல்-அமைச்சருக்கு ஆலோசனை கொடுப்போம். டெல்லியில் இருந்து கோப்புகளை கையெழுத்திடுவது சரியாக இருக்காது என்பதால் நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்