தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையத்துக்கு அனுமதி கொடுப்பதை வரன்முறைப்படுத்த கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையத்துக்கு அனுமதி கொடுப்பதை வரன்முறைப்படுத்த மைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-10 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையத்துக்கு அனுமதி கொடுப்பதை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று இ-சேவை மைய உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.

இ-சேவை மையம்

தூத்துக்குடி மாவட்ட இ-சேவை மைய உரிமையாளாகள் நலகூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசின் அனைவருக்கும் இ-சேவை மையம் என்ற திட்டத்தின் மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எந்தவொரு வரன்முறை, நிபந்தனைகள் இல்லாமல் இ-சேவை மைய ஐ.டி. வழங்கப்படுகிறது. இதனால் தெருவுக்கு 3 இ-சேவை மையங்கள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக இ-சேவை மையம் நடத்தி வரும் எங்களது தொழில் கேள்விக்குறியாகி உள்ளது. இ-சேவை மையம் ஐ.டி. கொடுப்பதை வரன்முறைபடுத்த வேண்டும். இ-சேவை மையம் விண்ணப்பிப்பதற்கும், அமைப்பதற்கும் சரியான விதிமுறைகளும், நிபந்தனைகளும் உருவாக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் இலவசமாக சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படுவதை நிறுத்த வேண்டும், என்று கூறி உள்ளனர்.

இலவச பட்டா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.பாபு தலைமையில், மாவட்ட செயலாளர் பி.கரும்பன் முன்னிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பல ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா கோரி கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு வீடற்ற ஏழைகளுக்கு விரைவாக இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறி உள்ளனர். எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சிந்தலக்கரை- துரைசாமிபுரம் செல்லும் பாதையில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதுபோல மேலநம்பிபுரம் செல்லும் வண்டிப்பாதையில் சரள் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சண்முகவேல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், இந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறேன். கடந்த 20 மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு எனக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்