இரவாங்குடி கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரிக்கை

இரவாங்குடி கிராமத்தில் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-11-23 18:51 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சாதாரண குழு கூட்டம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:- இரவாங்குடி கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள 21 தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு ஏற்படும் தருவாயில் இந்த வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளதாலும், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் அந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக தொகுப்பு வீடுகளை கட்டி தர வேண்டும். மேலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வீடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க முடியும். இரவாங்குடியில் இருந்து திருக்களப்பூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது சிதலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே அந்த தார் சாலையை சரி செய்து செப்பனிட வேண்டும். பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளை ஆய்வு செய்து அவற்றின் சேதங்களை கணக்கீடு செய்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மழை காலத்தில் பழைய கட்டிடங்கள் சேதம் ஏற்படும் தருவாயில் உள்ளதால் சின்னஞ்சிறு குழந்தைகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றனர். இதையடுத்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தீர்மானங்களை உதவியாளர் வெங்கடாசலம் வாசித்தார். ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்