கீழடி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கோரிக்கை

கீழடி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-03-11 18:45 GMT

திருப்புவனம்

கீழடி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

கீழடி ஊராட்சி

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் வெ.வெங்கடசுப்பிரமணியன். இவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வெ.வெங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:-

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வின்போது கிடைத்த 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்களை பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வெளிமாநிலத்தினர், உலகத்தமிழர்கள் பார்வையிட ரூ.18.42 கோடியில் கீழடியில் அருங்காட்சியகம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது. அது சமயம் அமைச்சர்கள், மாநில முதன்மை செயலாளர்கள், சிவகங்கை மாவட்ட கலெக்டர் போன்றோர் அடிக்கடி வந்து ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினார்கள்.

அதன் மூலம் அருங்காட்சியக கட்டிடம் நல்ல முறையில் கட்டப்பட்டும், கடந்த 5-ந் தேதி அன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்து பார்வையிட்டும், ஆர்வ மிகுதியால் தனியாக நின்று செல்பியும் எடுத்துக்கொண்டார். அது சமயம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்கள், மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கீழடி ஊராட்சி மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

கூடுதல் நிதி

மறுநாள் 6-ந்தேதியில் இருந்து பொதுமக்கள், மாணவ-மாணவியர் என தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகத்தை இலவசமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இனிமேல் விடுமுறை காலங்கள் வருவதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாக வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் கீழடி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுறையாவது கீழடி வந்து அருங்காட்சியகத்தின் அமைப்பை பார்வையிட்டு செல்ல வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்