திடலில் மட்டுமே காளைகளை அவிழ்த்து விட கோரிக்கை

சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது காளைகளை மஞ்சுவிரட்டு திடலில் மட்டுமே அவிழ்த்து விட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-11 18:45 GMT

திருப்பத்தூர்

சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது காளைகளை மஞ்சுவிரட்டு திடலில் மட்டுமே அவிழ்த்து விட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிராவயல் மஞ்சுவிரட்டு

தை மாதம் பிறந்தாலே தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். அதிலும் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை தை மாதம் முதல் மஞ்சுவிரட்டு போட்டிகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற சிராவயல், கண்டுப்பட்டி, அரளிப்பாறை, சிங்கம்புணரி, கண்டரமாணிக்கம், தேவபட்டு, இருமதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்.

குறிப்பாக திருப்பத்தூர் அருகே சிராவயலில் மாட்டு பொங்கல் தினத்திற்கு மறுநாள் நடக்கும் மஞ்சுவிரட்டானது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தப்படியாக சிறப்பு வாய்ந்த போட்டியாக இருந்து வருகிறது.

கண்மாய் நிரம்பின

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வருகிற 17-ந் தேதி அன்று நடக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து சிறப்பாக நடைபெறும். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான காளைகள், பார்வையாளர்கள் சிராவயல் திடலில் திரண்டு நின்று போட்டியை பார்த்து ரசிப்பது வழக்கம். மேலும் இதற்கு முந்தைய காலங்களில் இங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகளை அதன் உரிமையாளர்கள் இங்கு கொண்டு அவிழ்த்து விடுவார்கள்.

அதில் சில உரிமையாளர்கள் சிராவயல் பொட்டலுக்கு முன்பு உள்ள கண்மாய் பகுதியில் காளைகளை அவிழ்த்து விடுவதும் வழக்கம். நடப்பாண்டு மாவட்டத்தில் தொடக்கம் முதல் நல்ல மழை பெய்ததால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏராளமான கண்மாய்கள் நிரம்பி உள்ளன.

திடலில் அவிழ்க்க வேண்டும்

சிராவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்மாய்களிலும் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டால் எதிர்பாராத விதமாக காளைகள் இந்த கண்மாயில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டிக்காக காளைகளை கொண்டு வரும் காளையின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட்டு மீண்டும் தங்களது காளைகளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்