உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்

பாசிபட்டினம் அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-10-23 18:45 GMT

தொண்டி, 

பாசிபட்டினம் அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடுநிலைப்பள்ளி

திருவாடானை தாலுகா கலியநகரி ஊராட்சி பாசிபட்டினத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 1976-ம் ஆண்டு இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் இன்றுவரை நடுநிலைப்பள்ளியாகவே செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உயர்நிலைப்பள்ளி தொடங்க அரசு விதிகளின் படி கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தும் தரம் உயர்த்தப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி என்பது எட்டா கனியாகவே உள்ளது. இதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தரம் உயர்த்த வேண்டும்

இதுகுறித்து பரக்கத் நிஷா கூறியதாவது:- இப்பகுதியில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்ற மக்கள் தான் அதிகம். இங்கு குழந்தைகளை 8-ம் வகுப்பு வரை அதிகபட்சமாக படிக்க வைக்கின்றனர். அதற்கு மேல் படிக்க வெளியூர் செல்ல வேண்டும். இங்குள்ள மக்களின் பொருளாதார சூழ்நிலையால் இடையிலே படிப்பை நிறுத்தி விடுவதும் உண்டு. ஒரு சிலர் மட்டுமே வெளியூர்களுக்கு படிக்க அனுப்புகின்றனர். இங்குள்ள நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும்.

உம்மு சலிமா நூருல்அமீன்(கலியநகரி ஊராட்சி தலைவர்):-

பாசிபட்டினம் பள்ளியில் தான் நான் படித்தேன். நாங்கள் படிக்கும் போது 8-ம் வகுப்பு வரைதான் இருந்தது. அதே நிலைதான் இன்று வரை இருந்து வருகிறது. இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த போதிய மாணவர்கள், இட வசதி, கட்டிட வசதி விளையாட்டு மைதானம் உள்ளது. இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் பாசிப்பட்டனம், கலியநகரி, பரப்புவயல், மாணவநகரி, ஸ்தானிகன்வயல், புதுக்குடி, பட்டமங்கலம், பத்திரன்வயல், அடஞ்சாமங்களம் போன்ற அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

கல்வி பாதிப்பு

நைனார் சாம்பு(பாசிப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர்):- நானும் இந்த பள்ளியில் தான் படித்தேன். இப்பள்ளி தொடங்கப்பட்டு 70 வருடங்கள் இருக்கும். இப்பகுதியில் உள்ள மக்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு படிக்க அனுப்புவதில்லை. காரணம் வருமானம் போதிய அளவில் இல்லை. இங்கிருந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்க ஓரியூர் வட்டானம் அல்லது தொண்டிக்குதான் செல்ல வேண்டும். இங்கு உயர் நிலைப்பள்ளியை தொடங்கினால் இங்கு உள்ள பெண் பிள்ளைகளும் படிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

முத்துகிருஷ்ணன்:- இங்கிருந்து 9-ம் வகுப்பு படிப்பதற்கு அதற்கு மேல் படிப்பதற்கும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வருங்கால குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் இங்கு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும். இதுபோன்ற நிலையால் பெண் பிள்ளைகளின் கல்வி பெரிதும் பாதிப்படைகிறது. அரசு கவனத்தில் எடுத்து இதனை தரம் உயர்த்தி தர வேண்டும்.

உரிய உத்தரவு

கல்விஅதிகாரி:- இப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு 8-ம் வகுப்பில் 30 குழந்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும். அதேபோல 6, 7, 8-ம் வகுப்புகளில் அதிக அளவில் மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது கட்டிடங்கள் கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் போன்றவற்றிற்கு இடம் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உரிய உத்தரவுகள் வந்தவுடன் இப்பள்ளி தரம் உயர்த்தப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்