அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வைகை ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வைகை ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-13 17:20 GMT

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதேபோல் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தர்ப்பணம் கொடுக்கவும் அணைப்பட்டி வைகை ஆற்றுக்கு ஏராளமானோர் வருவார்கள். தர்ப்பணம் செய்தவுடன், ஆஞ்சநேயர் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்வார்கள்.

இந்தநிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டியுள்ள வைகை ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தை ஒட்டிய கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகள், தங்களது கடைகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அதேபோல் உடைப்பு ஏற்பட்ட கரை பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் தான் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதனால் வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் வந்தால், கோவில் வளாகத்தை பாதிக்கும் சூழல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அணைப்பட்டி வைகை ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்