தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றினார். வட்டார தலைவர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர்கள் செல்வக்குமார், ரதிசெல்வம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிச்சையா, அலங்காரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமையில், துணைத்தலைவர் கன்னியம்மாள் சண்முகசுந்தரம் முன்னிலையில் எம்.எல்.ஏ., தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளையும், மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

தாலுகா- யூனியன் அலுவலகம்

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த தாசில்தார் ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் அலுவலகத்தில் துணை சூப்பிரண்டு மாயவன், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோரும், தீயணைப்பு நிலையத்தில் நிலைய போக்குவரத்து அலுவலர் முத்துக்குமார் தலைமையில் நிலைய அலுவலர் இசக்கியும் தேசியக்கொடி ஏற்றினர்.

ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் தலைவர் வசந்தா தேசியக்கொடி ஏற்றினார். ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளி ஆட்சிக்குழு தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற பேராசிரியர் போஸ் தேசியக்கொடி ஏற்றினார்.

கூட்டுறவு நகர வங்கியில் தலைவர் கருப்பசாமி தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் வங்கி பொது மேலாளர் ஆதிநாதன், இயக்குனர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெடுங்குளம்

நெடுங்குளம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சகாயஎல்பின் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ராணி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஊராட்சித் துணைத் தலைவர் சொள்ளமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், கால்நடை மருத்துவர் நல்லத்தம்பி, கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, ஒன்றிய பற்றாளர் சக்திபேச்சி, சுகாதாரசெவிலியர் பெரில்மேரி, அங்கன்வாடி பணியாளர் லட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வமுத்து மேகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் வழிகாட்டுதலின்படி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆசிரியை சு.வனஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுதானந்தன் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கராத்தே, யோகா மற்றம் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தில் மாணர்கள் கலந்து கொண்டு தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

விழாவில் தட்சண மாற நாடார் சங்க உறுப்பினர் மற்றும் பள்ளிக்கமிட்டி உறுப்பினர் மு.லிங்கசெல்வன், அரசு வக்கீல் பூங்குமார், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு, எஸ்.அன்ஜன், எஸ்.அன்சுமான், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் வாசுகி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளிக்கமிட்டி உறுப்பினர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி செய்து இருந்தார். நிகழ்ச்சியை ஆசிரியை வி. இனிகோ தொகுத்து வழங்கினார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சக்தி விநாயகபுரம் 5-வது தெரு மற்றும் ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தேசிய கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர், வ.உ.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜான் பி.ராயர், மணிமொழியார், அரிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய தேசிய துறைமுக சபை தொழிலாளர் சங்கம் (ஐ.என்.டி.யு.சி) சார்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு சங்க பொதுச் செயலாளர் கதிர்வேல் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. கவுன்சில் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் உள்ள பஞ்சாயத்து யூனியன் கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். பின்னர், மாணவிகள் குகஸ்ரீ, ஆரோக்கிய நான்ஸி ஆகியோர் குடியரசு தினவிழா குறித்து பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சாந்தா நன்றி கூறினார்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தில் தலைவர் சொர்ணபிரியா துரை தேசிய கொடி ஏற்றினார். பின்னர் தியாகிகள் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பஞ்சாயத்து தலைவர் கொடியேற்றினார். பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் அப்துல்ரசாக் ரசூல் தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாதவன்குறிச்சி பஞ்சாயத்தில் தலைவர் சேர்ம துரை தேசியக்கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாடு பஞ்சாயத்தில் தலைவர் கிரேன் சிட்டா வினோஜின் தேசிய கொடி ஏற்றினார். சிறுநாடார்குடியிருப்பில் பஞ்சாயத்து தலைவர் கமலம் தேசிய கொடியேற்றினார். பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சித்திரைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நயினார்பத்து பஞ்சாயத்தில் தலைவர் அமுதவல்லி திலீப் குமார் தேசியக் கொடியை இனிப்புகள் வழங்கினார்.

குலசேகரன்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

பாண்டாரஞ்செட்டிவிளை

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை கரோலின் ஜெஸ்வதி தேசியக் கொடியேற்றினார். மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி தாளாளர் பிரபாகரன் வரவேற்றார். உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், அன்புராணி, சபானா, சாரதா, மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

காரங்காடு

குடியரசு தினத்தை முன்னிட்டு மாதவன்குறிச்சி பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் காரங்காட்டில் பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வரவு,செலவு கணக்கு, அனைவருக்கும் வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பற்றாளர் விஜயராகவன், பஞ்சாயத்து உறுப்பினர்கள் சந்திரசேகர், வைகுண்டநாதன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்