சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2023-01-27 09:06 GMT

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை பன்னாட்டு முனையத்தின் அருகே விமான நிலைய இயக்குனர் சரத்குமார் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.ஸ்ரீராம், விமான நிலைய அதிகாரிகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதையொட்டி மத்திய தொழிற்படை போலீசாரின் அணி வகுப்பும் நடந்தது.

விழாவில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் பேசியதாவது:-

சென்னை விமான நிலைய புதிய முனையம் ரூ.2,150 கோடி செலவில் 2½ லட்சம் சதுர அடியில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்க தயார் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் தான் பயணிகளுக்கு மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், பஸ் என அனைத்து போக்குவரத்து வசதிகள் கொண்டதாக அமைந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக விமான போக்குவரத்து டிஜிட்டல் வசதியை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் தகவல் பரிமாற்றங்களை தடையின்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்தில் முதன்மை கமிஷனர் மேத்யூஜோலி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பெருங்குடி மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் கொடியேற்றினர். ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசியக் கொடியை சுதா பிரசாத் ஏற்றினார்.

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், தேசிய கொடியை தான் ஏற்றாமல் அங்கிருந்த தூய்மை பணியாளர் ராணியை ஏற்ற வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்