உடற்கல்வி ஆசிரியரை கண்டித்துபள்ளி மாணவ, மாணவிகள் தர்ணா:ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

ஆண்டிப்பட்டி அருகே உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 18:45 GMT

உடற்கல்வி ஆசிரியர்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமான முறையில் தகாத வார்த்தைகள் பேசி வந்ததாகவும், பள்ளி நேரத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்கனவே புகார் கொடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலரை அந்த ஆசிரியர் தகாத வார்த்தைகள் கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

மாணவ, மாணவிகள் தர்ணா

இதனால் ஆத்திரமடைந்த ரெங்கசமுத்திரம் பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளிடம் தகாத வார்த்தை பேசி வரும் உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இந்திராணி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி வசந்தா ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறிய புகார்களுக்கு 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பள்ளிக்கு வர மாட்டோம் என்று கூறி மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்