சாலை விரிவாக்கப்பணி: அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-05 18:45 GMT

நெல்லிக்குப்பம்,

அளவீடு செய்யும் பணி

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒரு புறத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்ட நிலையில், மற்றொரு புறத்தில் சரியான முறையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்யாமல் சாலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவி இயக்குனர் சர்வேயர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விநாயகர் கோவிலில் இருந்து மீண்டும் அளவீடு செய்யும் பணியை தொடங்கினார்கள். அப்போது வாய்க்கால் அமைப்பதற்காக ஏற்கனவே 3 முறை வரையப்பட்டிருந்த குறியீடை தொடர்ந்து புதிதாக ஒரு இடத்தில் அதிகாரிகள் குறியீடு வரைந்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் வேறு இடத்தில் அளவீடு செய்வது நியாயமா? அளவீடு செய்வதற்கு எந்த ஆண்டு வரைபடம் வைத்து அளவீடு செய்து உள்ளீர்கள் என சரமாரி கேள்வி கேட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி இயக்குனர் சர்வேயர் சுரேஷ், இந்த பகுதிக்கு சாலை அமைக்க கூடாது என்பதற்காக தகராறு செய்கிறீர்களா? என கேட்டார். அப்போது, அரசியல் கட்சியினர் ஒரு சிலருக்கு ஆதரவாக உங்கள் நடவடிக்கை உள்ளது. மேலும் அளவீடு செய்வது ஏன் மாறுபடுகிறது என கேட்டனர். இதற்கு பதில் அளிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சரியான முறையில் அளவீடு செய்யாத அதிகாரிகளை கண்டித்து திடீரென அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களை கலைந்து போக செய்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்