சென்னையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட உள்ளதாக தகவல்
காந்தி சிலை அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு சார்பில் வரும் ஜனவரி 26-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கான இடத்தை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும்.
ஆனால் தற்போது அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வேறு இடத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவின் போது அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு, முப்படை வீரர்கள் அணிவகுப்பு, காவல்துறை அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே அதற்கு ஏற்ற வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அல்லது விவேகானந்தர் இல்லம் அருகே குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.