கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்

கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2022-10-06 17:32 GMT


சிவகங்கை மாவட்டம் டி.வேளாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது25). ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சித்ராதேவி. மாவட்ட காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சித்ராதேவி தனது மகளுடன் கடந்த ஆண்டு மே மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மகளை பிரிந்து கவலையில் இருந்த அசோக்குமார் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மனைவியிடம் கேட்டாராம்.

இதற்கு அவர் மறுத்ததாகவும் இதனால் அசோக்குமார் மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 10-ந் தேதி ராமநாதபுரத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் அசோக்குமாரின் தாய் முத்து என்பவர் தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் சிறப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மேற்கண்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி உத்தரவின்பேரில் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையின்போது அசோக்குமாரின் செல் போன்கள் கைப்பற்றப்பட்டு கேணிக்கரை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் போலீசார் அதனை எடுத்து விற்பனை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக 2 பேர் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கில் காவலர் அசோக்குமாரின் தற்கொலை தொடர்பாக ஆரம்பம் முதல் விசாரணை மேற்கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவில் தற்போது ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் காவலர் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்