வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு:மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு

வீடு, வாகன கடன் தவணைத்தொகை அதிகரிப்பு: மக்களுக்கு பேரிடியை தரும் ‘ரெப்போ' வட்டி விகித உயர்வு குறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

Update: 2023-02-09 18:45 GMT

ஏழை-எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

ரெப்போ வட்டி விகித உயர்வு

மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.

'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.

6.50 சதவீதம்

அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது.

அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

கூடுதல் தவணைத்தொகை

தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும்.

உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-

சிரமத்தை கொடுக்கும்

இதுபற்றி பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்' என்றார்.

'குருவி தலையில் பனங்காய்'

தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் கே.மாரியப்பன் கூறும்போது, 'தொடர் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த வட்டி விகிதமான 6.25 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தட்டுதடுமாறி, மீண்டும் வங்கி கடன்களின் உதவியுடன் தொழில்களை நடத்துவதற்கு சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில், 2.50 சதவீதம் கூடுதல் வட்டி என்பது 'குருவி தலையில் பனங்காய்' வைத்தது போல் ஆகிவிடும். திடீர் திடீரென்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிலையான கொள்கை முடிவு எடுக்காமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கை. கடன் வழங்கும்போது என்ன வட்டி விகிதத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதற்கும் அதே வட்டி விகிதத்தில் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்' என்றார்.

நிதிசுமையை அதிகரிக்கும்

திருச்செங்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி குமரகுருபரன்:-

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. இது வங்கிகளில் கடன்பெற்றுள்ள நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே மக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா பாதிப்பு போன்றவற்றில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வட்டி உயர்வு மேலும் நிதிசுமையை அதிகரிக்க செய்யும்.

இதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம். சாமானிய மக்கள் மீது நிதி சுமையை அதிகரிக்க செய்வதை கைவிட வேண்டும். பணவீக்கத்தை குறைக்க பல்வேறு நிலைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

டெபாசிட்டுக்கான வட்டியும் உயரும்

நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இணை செயலாளர் வேங்கடசுப்பிரமணியம்:-

விலைவாசி உயர்வை குறைக்கவும், நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி முறையாக கண்காணித்து ரெப்போ வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது. ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டால், வங்கி கடன் வட்டி மட்டும் இன்றி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் உயரும். அவ்வாறு உயரும் போது வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கும்.

தற்போது பலரும் அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு தங்களது சேமிப்பு பணத்தை இழந்து வருவதை நாம் செய்தி வாயிலாக அறிகிறோம். வங்கி சேமிப்பே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

கொரோனா பாதிப்பு

நாமக்கல்லில் சிறுதொழில் செய்து வரும் ஷீபா ராஜ்குமார்:-

சிறு, குறு தொழில் புரிவோர் வங்கிகளில் கடன் வாங்கி, உழைத்து தொழிலில் முன்னேறி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் தொழில்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இப்பொழுது தான் கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கி உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் வங்கி கடன்களின் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இது சிறு தொழில் செய்து மாதாமாதம் தவணைத் தொகை கட்டுபவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். அவர்களின் கடன் தவணை அதிகரிக்கும். ஏற்கனவே பெரும் பாதிப்படைந்த நிலையில் உள்ளவர்கள் மேலும் பாதிப்பார்கள். ஆகவே அரசு இதை கவனித்து உடனடியாக உயர்த்தப்பட்ட கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க ஆவன செய்ய வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனம்

மோகனூரை சேர்ந்த நிதிநிறுவன மேலாளர்:-

தாறுமாறாக உயர்ந்து வரும் விலைவாசிக்கு மத்தியில், இப்போது வீடு, வாகன வங்கி கடன் தவணைத் தொகை உயர்வு அதிர்ச்சியை தான் கொடுக்கிறது. வங்கி கடனை ஏற்கனவே குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தவணைத் தொகையாக செலுத்தும் வகையில் திட்டமிட்டு பட்ஜெட் ஒதுக்கி, குடும்பத்தை நடத்தி வரும் என்னை போன்ற பட்ஜெட் குடும்பத்துக்கு, இந்த உயர்வு நிச்சயம் கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான். இதே நிலை நீடித்தால் என்ன செய்வோம்? என்பது கேள்விக்குறிதான்.

தற்போதைய ரெப்போ வட்டி விகித உயர்வால் நடுத்தர மக்களுக்குதான் சுமை அதிகரித்து இருக்கிறது. ஆனால் இந்த வட்டி விகித உயர்வால், கார்ப்பரேட் கடன்களுக்கு உயர்வு இல்லை என்பதுதான் வேடிக்கை. இதனால் கார்ப்பரேட் நிறுவனம் வளருகிறது. சாதாரண மக்கள் வேதனைப்படுகிறார்கள். எனவே ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்