நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 127.55 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 272 கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று அணையின் நீர்மட்டம் 129 அடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 1½ அடி வரை உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 763 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பெரியாறு 3.1, தேக்கடி 46.2, கூடலூர்1.4, உத்தமபாளையம் 3.4, மஞ்சளாறு 33, சோத்துப்பாறை 36, போடி 19.2, பெரியகுளம் 2.

Tags:    

மேலும் செய்திகள்