நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மனு
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், விவசாய நிலங்களில் அரசின் அனுமதியின்றியும், தவறான காரணங்களை கூறி அனுமதி பெற்று வீட்டுமனைகளாக பிரித்து விற்பதை தடுக்க வேண்டும். நீர்வளத்துறைக்கு சொந்தமான வாய்க்கால் கரை, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். 100 ஆண்டுகள் பழமையான முசிறி பள்ள வாய்க்கால் கரையை அழித்து நிலமாக மாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
மழை-வெள்ள காலங்களில்...
தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அயிலை சிவ.சூரியன் கொடுத்த மனுவில், கோப்பு கிராம ஊராட்சியில் உள்ள கோப்பு-முதலைப்பட்டி வடிகால் வாரி, கொடியாலம் கிராம ஊராட்சியில் உள்ள கொடியாலம் பாசன மற்றும் வடிகால் கால்வாய்கள், புலிவலம், சுப்பராயன்பட்டி பாசன மற்றும் வடிகால்கள், குழுமணி சிவன் கோவில், தச்சன்குடி வாய்க்கால்கள், மருதாண்டாகுறிச்சி, மல்லியம் பத்து பாசன மற்றும் வடிகால் கால்வாய்கள் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புல், செடி, கொடிகள் படர்ந்து மழை-வெள்ள காலங்களில் விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேற்கண்ட பாசன மற்றும் வடிகால் கால்வாய்களை தலைப்பு முதல் கடைமடை பகுதி வரை தூர்வாரி தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் கொடுத்த மனுவில், இந்த ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது. குறுவை சாகுபடிக்கான விதைகள் தொகுப்பு 20 கிலோ மூட்டையில் தர வேண்டும். ரூ.2 ஆயிரம் மதிப்பிற்கு குறைவான அரசு சலுகைகள் மற்றும் மானியங்கள் பெற ஆதார் கார்டு அவசியம் இல்லையென மத்திய - மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அரசு மானியமாக தரும் 2 தென்னங்கன்றுகளை பெறுவதற்கு கூட ஆதார் கார்டு அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு ஆதார் எண்ணில் பல்வேறு சலுகைகள் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு பெரிய சலுகைகள் கிடைக்க தடையாக உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். தனியார் நிறுவனங்களை விட கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்களை கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் சங்கங்கள் கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரம் வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நில ஒருங்கிணைப்பு சட்டம்
அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ சட்டமன்றத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் அரசுக்கு மனு செய்து 250 ஏக்கர் பெற்று தொழில் செய்யலாம். இதன் காரணமாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ள இடங்களை கையகப்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனர். முன்னதாக கொலை செய்யப்பட்ட விவசாய சங்க தலைவர் சண்முகசுந்தரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.