மீன் பிடிக்கும் குத்தகை தொடர்பான புதிய அரசாணை ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு

குளம், ஏரி உள்ளிட்டவைகளில் மீன் பிடிக்கும் குத்தகை தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த புதிய அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-06-23 18:51 GMT

சென்னை,

ஏரி, குளம், கால்வாய், முகத்துவாரம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மீன் பிடிக்கும் குத்தகைக்கு விடும்போது, மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் ஹரிஜனங்கள் உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று 1993-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளத்துறை அரசாணை பிறப்பித்தது.

மேலும் அதில், இந்த கூட்டுறவு சங்கங்களும் குத்தகைக்கு எடுக்க முன்வராத பட்சத்தில் மட்டுமே, பொது ஏலம் மூலம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த அரசாணை இன்று வரை நடைமுறையில் உள்ளது.

புதிய அரசாணை

இந்தநிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடந்த மீன்பிடி குத்தகை தொடர்பான வழக்குகளில், சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் 2022-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், பொது ஏலத்தின் அடிப்படையில், அதிக விலை கோருபவர்களுக்கு மீன்பிடி குத்தகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலுவையில் உள்ளபோது, இந்த புதிய அரசாணை பிறப்பித்தது தவறு. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ரத்து

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் எஸ்.சண்முகசுந்தர் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, 2022-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு முற்றிலும் முரணாக இது உள்ளது. அதனால் 2022-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறேன்.

மீன்பிடி குத்தகை விடும்போது, மீனவர்கள், ஹரிஜனங்கள் உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவு சங்கத்துக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். அதாவது கலெக்டர் நிர்ணயிக்கும் தொகைக்கு ஏற்ப குத்தகை எடுக்க இந்த கூட்டுறவு சங்கங்கள் முன்வராதபட்சத்தில், உள்ளூர் பஞ்சாயத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மாசுப்படுத்தக்கூடாது

ஒருவேளை அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இருந்தால், அல்லது கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகமும் குத்தகை எடுக்க விரும்பினால், பொது ஏலம் மூலம் குத்தகை வழங்க வேண்டும்.

மேலும், மீன்களை அதிகம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தண்ணீரை மாசுப்படுத்தக்கூடாது. அவ்வாறு தண்ணீரை மாசுப்படுத்தி, அதை விவசாய பயன்பாட்டுக்கு வழங்கி நிலத்துக்கு தீங்கு ஏற்பட்டால், மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்