குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணி
சீர்காழி புதிய பஸ்நிலையத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணி
திருவெண்காடு:
சீர்காழியில் புதிய பஸ்நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கிறது. மேலும் பூம்புகார், மயிலாடுதுறை, பொறையாறு, கொள்ளிடம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்தில் உள்ள சிமெண்டு சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி சீர்காழி பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.