ஊட்டியில் சாலைகள் சீரமைப்பு
ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி,
ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் திகழ்கிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி வரை உபயதாரர்கள், பல்வேறு சமுதாயத்தினர் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஹெத்தையம்மன், மீனாட்சி அம்மன் உள்பட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார்.
சாலை சீரமைப்பு
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு மணி அளவில் நடைபெறுகிறது. அன்றைய தினம் சிறப்பு கனகாபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடக்கிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் முகூர்த்த கால் நடுதல் விழா நடைபெற்றது.தேரோட்டத்தை முன்னிட்டு மத்திய பஸ் நிலையம், மெயின் பஜார், ஐந்து லாந்தர் சந்திப்பு, காபி ஹவுஸ், மணிக்கூண்டு மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 2 பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
மேலும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க, தடுப்புகள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு, கொடி இறக்கம், 21-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.