மருத்துவ மரப்பூங்கா மீண்டும் திறப்பு
பராமரிப்பு பணி நிறைவடைந்து பழனியில் மீண்டும் மருத்துவ மரப்பூங்கா திறக்கப்பட்டது.
பழனி காரமடை வையாபுரிக்குள கரையோரத்தில் மருத்துவ மரப்பூங்கா உள்ளது. வனத்துறை சார்பில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இங்கு மருத்துவ குணமுள்ள மரங்கள், செடிகள் உள்ளன. அந்த செடிகளில் பலகை வைத்து, அதில் மரத்தின் பெயர், பயன்கள் பற்றிய விவரமும் எழுதப்பட்டுள்ளது. எனவே பழனிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தனர்.
இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த 2020-ம் ஆண்டு பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில், பூங்காவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முதல் மீண்டும் மருத்துவ பூங்கா திறக்கப்பட்டது. பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையொட்டி மாவட்ட வனஅலுவலர் திலீப் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆய்வின்போது வனச்சரகர் பழனிக்குமார், வனவர் சங்கர், பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.