கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் மீண்டும் திறப்பு

காட்டு யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்ட கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2023-09-22 21:45 GMT

காட்டு யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்ட கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

காட்டு யானைகள் முகாம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், வனப்பகுதியில் மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு ஆர்வத்துடன் சென்று இயற்கை அழகை ரசிப்பார்கள்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதனால் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது வரை இந்த தடை நீடிக்கிறது.

சுற்றுலா இடங்கள் மூடல்

இதற்கிடையே கடந்த 19-ந் தேதி நள்ளிரவு பேரிஜம் ஏரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கூட்டம், அங்கிருந்து நகர்ந்து மோயர் பாயிண்ட் பகுதிக்கு வந்தன. அப்போது அங்கு இருந்த 13 கடைகளை காட்டு யானைகள் சூறையாடின. விடிய, விடிய அங்கேயே முகாமிட்டிருந்த காட்டு யானைகள், மறுநாள் அதிகாலையில் பைன்மரக்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்தன.

காட்டு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மோயர் பாயிண்ட், குணாகுகை உள்பட கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.

மீண்டும் திறப்பு

இந்தநிலையில் பைன்மரக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் மீண்டும் பேரிஜம் ஏரிக்கு இடம்பெயர்ந்தன. இதையடுத்து வனப்பகுதி சுற்றுலா இடங்களை திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை முதல் மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டன.

இதையொட்டி நேற்று கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் வனப்பகுதி சுற்றுலா இடங்களில் குவிந்தனர். அப்போது அங்கு நிலவிய இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நண்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை பார்த்து உற்சாகம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்