ரூ.1 கோடியில் திருப்பணிகள்; தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணிகளில் தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2022-10-06 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணிகளில் தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியது.

கோவிலில் பரிகார பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி கோவிலின் கருவறைக் கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அன்று தேவ பிரசன்னத்தில் கூறியபடி வாஸ்து படி திருப்பணிகள் நடத்த வேண்டும் என இந்து இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கோவில் தந்திரி தலைமையில் இந்து இயக்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

திருப்பணிகள்

இதையடுத்து ஜனவரி மாதம் 8-ந் தேதி குரு சன்னதியில் பரிகார பூஜையும், தொடர்ந்து மார்ச் மாதம் மாசிக்கொடை விழா 10 நாட்களும் நடந்தது.

இன்னும் 5 மாதத்தில் மாசிக்கொடை விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கோவில் திருப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருவட்டார் வந்த அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து மண்டைக்காட்டில் திருப்பணிக்காக நடந்து வந்த மர வேலைகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கோவில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியது. பின்னர் ஆகம விதிக்கு உட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழிக்கோல் அமைத்து மேற்கூரை அமைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாராதனை நேரம் மாற்றம்

கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30-க்கு தீபாராதனை, நண்பகல் 12.30-க்கு உச்ச தீபாராதனை மற்றும் மாலை 6.30-க்கு தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கும்.

நேற்று திருப்பணிகளுக்காக தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியதால் உச்ச தீபாராதனை முன்னதாக பகல் 11.30 மணிக்கு நடத்தப்பட்டது. புதிய கொட்டகை அமைக்கும் பணி நிறைவு பெறும் வரை உச்ச தீபாராதனை மட்டும் முன்னதாக 11.30 மணிக்கு நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்