வாலாஜாபாத் அருகே ரூ.52 லட்சத்தில் ஏரியை சீரமைக்கும் பணி
வாலாஜாபாத் அருகே ரூ.52 லட்சத்தில் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்.
மழையால் ஏரி கரைகள் சேதம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வேகவதி உபவடி நில திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம், வாலாஜாபாத் மற்றும் வெம்பாக்கம் தாலுக்காவில் உள்ள 32 ஏரிகளை சீரமைக்க உலக வங்கி நிதியின் கீழ் நீர்வள நிலவள திட்டத்தில் ரூ.18 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள வில்லிவலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக கரைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. ஏரி கரைகளை சரிசெய்து தூர்வாரி தர வேண்டும் என வில்லிவலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ரூ.52 லட்சத்தில் சீரமைப்பு
வில்லிவலம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் 71 ஏக்கர் பரப்பளவிலான வில்லிவலம் ஏரியை ரூ.51 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சீரமைத்து தர தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வில்லிவலம் ஏரிக்கரையில் மண்ணை கொட்டி அகலப்படுத்தி பலப்படுத்துதல் மற்றும் கரையை உயர்த்துதல் மதகுகள், கலங்குகளை சீரமைத்தல், தூர்வருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜை விழாவில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர் கலந்து கொண்டு ஏரியில் தூர்வாரி மதகுகள் கலங்குகளை சீரமைக்கும் பணியினை விவசாயிகள் கிராமப் பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணிகள் பூமி பூஜை விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர்.